Del Sample Page

This is an example page.

 

நல்ல கனவுகள் நற்செய்தி கூறுபவை என்றால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் காணுகின்ற கனவுகளின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது? இது பலருக்கும் இருக்கின்ற சந்தேகம். கனவுகளின் பலன்கள் என்ற பெயரில் பலரும் நூல்களை எழுதித் தள்ளியுள்ளனர். இப்னு ஸீரின் என்பவர் கனவுகளின் விளக்கத்தை அறிந்தவராக இருந்தார் எனவும் கூறி வருகின்றனர். இவையாவும் கட்டுக் கதைகள் தான்.

இன்னின்ன கனவுக்கு இது தான் பலன் என்றெல்லாம் அவர்கள் கூறுவதற்கு குர்ஆனிலோ, நபிமொழியிலோ எந்த ஆதாரமும் இல்லை.

யானையைக் கண்டால் இது நடக்கும். பூனையைக் கண்டால் அது நடக்கும்என்றெல்லாம் உளறும் போலிகளின் பேச்சை நம்பி நாம் நிம்மதி இழக்கத் தேவையில்லை.

நல்ல கனவுகள் மூலம் இறைவன் நமக்கு நற்செய்தி கூறுகிறான் என்றால் அதன் விளக்கம் நமக்கே புரியும் வகையில் தான் கூறுவான்.

அனைத்தையும் அறிந்தவனை (அல்லாஹ்வை) போல் வேறு எவரும் உமக்கு விளக்க முடியாதுஎன்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 35:14)

எனவே நமக்கு ஒரு நற்செய்தி கூறு விரும்பும் இறைவன் நமக்குப் புரியாத வகையில் கூறிவிட்டு இந்த உளறுவாயர்களின் விளக்கத்தைக் கேட்கும் படி விட மாட்டான்.

எனவே காணும் கனவுக்கு எவரிடமும் விளக்கம் கேட்கத் தேவையில்லை. அது எந்த நற்செய்தியைக் கூறுகிறது என்று நமக்குத் தோன்றுகிறதோ அது தான் அதற்கான விளக்கம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் பல கனவுகளும் அவற்றின் விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்தால் நமது கனவின் பலன் என்னவாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கான வழி நமக்குத் தென்படும்.

பொதுவாக கனவுகளுக்குப் பலன் கூறுவோர் கல்யானத்தைக் கண்டால் கருமாதி நடக்கும் என்றும் கருமாதியைக் கண்டால் கல்யாணம் நடக்கும்என்றும் ஏறுக்குமாறாக கூறி வருகின்றனர். ஆனால் கனவுகளின் விளக்கம் நாம் எதைக் கண்டோமோ அதுவாக இருக்கும். அல்லது அதை ஒட்டியதாக இருக்கும். அதற்கு நேர் முரணாக இருக்காது.

குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ள கனவுகளிலிருந்து இந்த உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.

குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்பட்டுள்ள சில கனவுகள்

யூசுப் நபியின் கனவு

12-வது அத்தியாயம் 4-வது வசனத்தில் யூசுப் நபியவர்கள் கண்ட கனவைக் கூறுகிறான்.

என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 12:4)

இந்தக் கனவின் பலன் என்ன என்பதை இதே அத்தியாயத்தின் 100-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 12:100)

யூசுப் நபியவர்கள் பிற்காலத்தில் அதிபராக ஆகி அவர்களின் ஆட்சியின் கீழ் அவர்களின் தாய் தந்தையர் வாழும் நிலை ஏற்படும் என்பதையும் அவரது அண்ணன்மார்களும் அவருக்குக் கீழே இருக்கும் நிலை ஏற்படும் என்பதையும் சூரியன், சந்திரன், பதினொரு நட்சத்திரங்கள் அவருக்குப் பணிவதாகக் காட்டுவதன் மூலம் இறைவன் அறிவித்தான்.